வியாழன், 28 ஜனவரி, 2016

கணவாய் மீன் வறுவல்!


கணவாய் மீன் வறுவல்

தேவையான பொருட்கள்

கணவாய் மீன்   - 1 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
புண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் பொடி - 2 தேக்கரண்டி
நெல் சீரகத் துர்ள் - 2 தே க
எண்ணை 
கடுகு உளுத்தம் பயிர்
கருவேப்பிள்ளை கொத்துமல்லி தழை.

(காரம், தொக்கு அதிகமாக வேண்டுமென்றால்  மேற்கொண்டு சேர்த்தக் கொள்ளங்கள்.)



முட்டை கணவா மீன்


நன்றாக ஆய்ந்து கழுவி எடுத்தக்கொள்ளுங்கள்.



ஒரு வாணலில் தலைகளை மட்டும் எடுத்து இரண்டாக வெட்டி (அப்படியே கூட போடலாம். எனக்கு பார்க்க பயமாக இருப்பதால் இப்படி இரண்டாக வெட்டிவிடுவேன்.... ) அதனுடன் கொஞ்சம் உப்பு கொஞ்சம் மஞ்சள் பொடி சேர்த்து தண்ணீர் விடாமல் அடுப்பில் வைத்து மிதமான தீயில் வேக விட வேண்டும். 
      கனவா தலைகள் வேகும் போதே அதிகமாக நீரை வெளியிடும். இந்த நீரை வடிகட்டி கீழே கொட்டிவிட வேண்டும். இப்படிக் கொட்டிவிடுவதால் கானவா மீனின் கவுச்சி வாடை கிட்டத்தட்ட முற்றிலுமாக போய்விடும்.
      பிறகு இதைத் தனியே எடுத்து வைத்துவிடுங்கள்.


வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை வெட்டி.... பின்பு


வாணலியை அடுப்பிலேற்றி காய்ந்ததும் எண்ணை விட்டு கடுகு உளுத்தம் பயிரு போட்டுத் தாளித்துப்.... பின்பு


வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி... பின்பு


தக்காளி, பூண்டு விழுது, கறிவேப்பிள்ளை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து....


நன்றாக வதக்கியப் பின்பு...


அதில் கனவாய் மீன், ஏற்கனவே வேகவைத்த கனவா மீன் தலை, மிளகாய்த்துாள், நெல் சீரகப்பொடி, சேர்த்து....


நன்றாகக் கிளறி மூடி வேகவிட வேண்டும். இந்த நேரத்தில் ருசி பார்த்து காரம் உப்பு தேவையான அளவு சேர்த்துக் கொள்ளலாம்.
அடிக்கடி அடிபிடிக்காமல் கிளறிவிட வேண்டும்.


நன்றாக வெந்து தண்ணீர் சுண்டியதும் கொத்துமல்லி தழையைக் கிள்ளி போட்டு இறக்கி விட வேண்டும்.


கணவாய் மீன் வறுவல் ரெடி!

இதுவே கணவாய் மீன் வறுவல் செய்முறை. இதை சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ளலாம்.
(மற்றபடி நல்ல சுவையான சைடிஷ்)
         நான் ஏன் இவ்வளவு விளக்கமாகச் சொன்னேன் என்றால்...... எனக்கு யாரும் இவ்வளவு விளக்கமாகச் சொல்லிக் கொடுக்கவில்லை. .....(

நட்புடன்
அருணா செல்வம்.

திங்கள், 25 ஜனவரி, 2016

பண்பு இல்லாதவனைப் பாராட்டினால்…..



    நல்ல பண்புகள் கொண்டவனை யாரும் எவ்வளவு உயர்வாகப் பேசியும் பாராட்டலாம். அவன் பாராட்டியவருக்கு எதுவும் தரவில்லை என்றாலும் பாராட்டி பேசியவருக்கு மனமகிழ்ச்சியாவது கிடைக்கும்.
    ஆனால் நல்ல பண்புகள் இல்லாத, அமையப்பெறாத ஒருவனை ஒருபோதும் உயர்வாகப் பாராட்டக்கூடாது. அப்படி உயர்வாக அவனைப் பாராட்டினாலும் அந்த பாராட்டுக்கு உரியவன் தான் இல்லை என்பது அவனுக்குத் தெரிந்து தான் இருக்கும்.
     அப்படித்தான் ஔவையார் ஒருநாள் செல்வந்தன் ஒருவனிடம் சென்று பரிசு பெறுவதற்காக அவனை உயர்த்திப் பாடிவிட்டு காத்திருந்தார். அந்தச் செல்வந்தனோ ஔவைக்குப் பரிசு எதுவும் தராமலேயே அனுப்பி விட்டான்.
    நொந்து போய் வந்த ஔவ்வையாரை மற்றொரு புலவர் பார்க்க நேர்ந்தது. ‘போயும் போயும் அவனிடமா பரிசு பெற போனீர்கள் ? போகட்டும்…. அவன் உங்களுக்குப் பரிசு ஏதும் தந்தானா… ?‘ என்று விசாரித்தார் அந்தப் புலவர்.
    ஔவையார் அதற்கு பதிலாகத் தந்த பாடல் தான் இது.

கல்லாத ஒருவனையான் கற்றாய் என்றேன்.
    காடேறித் திரிந்தவனை நாடா என்றேன்.
பொல்லாத ஒருவனைநான் நல்லாய் என்றேன்.
    போர்முகத்துக் கோழையைப் புலியே என்றேன்.
மல்லாரும் புயமென்றேன் தேம்பற் றோளை.
    வழங்காத கையனையான் வள்ளல் என்றேன்.
இல்லாது சொன்னேனுக்கு இல்லை என்றான்.
    யானும்என்றன் குற்றத்தால் ஏகின் றேனே !

என்று தன் நிலையை விளக்கிச் சொன்னார் ஔவையார்.
    ‘அந்த செல்வந்தனிடம் இல்லாதவைகளை நான் இருப்பனவாகச் சொன்னேன். இல்லாததை எல்லாம் நான் சொன்னதால், அவனும் எனக்கு எதுவும் இல்லை என்றான் போலும். ஆகவே தான் என் குற்றத்தை உணர்ந்த நானும் எதுவும் பேறாமல் போகிறேன்‘ என்றார் ஔவையார்.

பாடலின் பொருள் -  கல்வி கற்றாதவனைக் கல்விமான் என்றேன். காட்டில் வாழ்பவனை நாட்டு மனிதன் என்றேன். பொல்லாதவனை நான் நல்லவன் என்றேன். போரைக் கண்டு அஞ்சும் கொழையைப் புலி என்றேன். மெலிந்த தோள்களை மற்போர் செய்யும் வலிமையானத் தோள் என்றேன். அடுத்தவருக்குக் கொடுத்து உதவாதவனை வள்ளல் என்றேன். இல்லாததைச் சொன்ன எனக்கு, அவனும் இல்லை என்றான். தகாதவனைப் பாராட்டிய குற்றத்திற்காக நானும் எதையும் பெறாமல் போகிறேன்.

அதனால்

    பாராட்டத் தகுதி அற்றவனைப் பாராட்டுவதும் குற்றம்.

செவ்வாய், 19 ஜனவரி, 2016

எங்களுக்கும் காலம் வரும் !




நட்புறவுகளுக்கு வணக்கம்.
     போன ஞாயிறு அன்று எங்கள் ஊரில் தமிழர்த் திருநாள் தைப்பொங்கல் விழாவைச் சேர்ந்து சிறப்பாகக் கொண்டாடினோம்.
     எப்போதும் போல அந்த விழாவில் பாட பொங்கல் பாடல் கேட்டார்கள். உடன், பாச மலர் படத்தில் வரும் ’எங்களுக்கும் காலம் வரும். காலம் வந்தால் வாழ்வு வரும்‘ என்ற பாடலைப் பொங்கலுக்கா மாற்றி எழுதிக் கொடுத்தால் அனைவரும் சேர்ந்து பாட ஏதுவாக இருக்கும் என்றார்கள்.
    நானும் அதன்படி மாற்றி எழுதிக் கொடுத்தேன். அனைவரும் சேர்ந்து பாடி மகிழ்ந்தார்கள். நீங்களும் பாடிப்பாருங்கள் தோழ தோழியர்களே !


பொங்கல் பாடல் !  2016

மங்கலமாய்ப் பொங்கல் வரும்
பொங்கல் வந்தால் இன்பம் வரும்
இன்பம் வந்தால் அனைவருடன் சேர்ந்திருப்போமே !

துன்பம் துன்பம் என்றே நலிந்திருந்தோம் !
மலரும் இன்பம் என்றே காத்திருந்தோம் ! - 2
துன்பமெல்லாம் வடிந்து விடும்
வடிந்தவுடன் மனம் மகிழும்
மனம் மகிழ்ந்தால் ஒன்று கூடி
தினம் மகிழ்வோமே !                     (மங்கலமாய்)

அன்பும் நட்பும் சேர அகம் மகிழும் !
ஒன்றாய்ச் சேர்ந்தே என்றும் நாம் வளர்ப்போம் !
இனிக்கின்ற பொங்கலைப் போல்
வாழ்வினிமை நாம் பெறுவோம்
கூடி நன்றாய்ச் சேர்ந்திருந்து வாழ்ந்திருப்போமே !   (மங்கலமாய்)

நட்பில் ஒரு கலங்கமில்லை !
நாளும் அதில் தீமையில்லை !
கள்ளமில்லா வாழ்வினிலே தோல்வியுமில்லை ! – 2  (மங்கலமாய்)

அன்புடன் 
அருணா செல்வம்.

வியாழன், 14 ஜனவரி, 2016

பொங்கல் வாழ்த்து !



அன்பு விளக்கில் அகமிருக்க,
    அனைத்துச் சொந்தம் சேர்ந்திருக்க,
இன்பம் எல்லாம் நிலைத்திருக்க,
    ஏற்றம் கூடி வலுத்திருக்க,
நன்மை மட்டும் சூழ்ந்திருக்க,
    நாளும் எண்ணம் உயர்ந்திருக்க
என்றும் கிடைக்க வழிசெய்வாள்
    இன்று பிறக்கும் தைமகளே !


நட்புறவுகள் அனைவருக்கும் 
என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

அன்புடன் 
அருணா செல்வம்.