வெள்ளி, 27 செப்டம்பர், 2013

கருணை ஒளி!! (சொந்தக் கதை)




கம்பன் கவியில் ஒளிர்ந்து மின்னுவது...
கருணை ஒளி!!

 இறை வணக்கம்!

தும்பிக்கை தூயவா! தொல்லுலகின் மூத்தவா!
நம்பிக்கை நாயகா! நாட்டினைச் – செம்மையாக்க
உம்மினை யாருளர்? ஓங்கார வேதவா
எம்மையும்நீ காப்பாய் இருந்து!

தமிழ் வணக்கம்!

கற்றோர் வணங்கிக் களிக்கும் தமிழ்த்தாயே!
உற்றார், உயர்ந்தோர், உறவினர், – சுற்றத்தார்
பற்றாய் இருந்தாலும் பாவை எனக்குள்ளே
முற்றும் இருப்பாய் முதிர்ந்து!

குரு வணக்கம்!

காதலினை ஓதி களித்துநின்றும் இவ்வுலகில்
சாதனை பெற்றவரே! சன்மார்க்க – வேதத்தைப்
போதனைச் செய்பவரே! போற்றி வணங்கினேன்!
பாதனில் உம்மைப் பதித்து!

அவை வணக்கம்!

செம்மொழின் சீரும் சிறப்பறிந்த செல்வர்களே!
எம்மொழிக்கே ஈடேது? இவ்வவையில் – கம்பனிடம்
வம்பாகப் பேசிட வந்தே வணங்கினேன்!
தெம்பைத் தருவீர் தெளிந்து!



 கம்பனில் கருணை ஒளி!!

1.
வான்பிறந்து வளமளிக்கும் மழையின் வாழ்வு
   வசந்தத்தை வரவழித்து வடிந்து போகும்!
ஊன்பிறந்தே ஓடுகின்ற மனித வாழ்வும்
   உணர்வுக்கே உடல்கொடுத்து மாண்டு போகும்!
தேன்பிறக்க உழைக்கின்ற தேனி வாழ்வு
   தீதின்றிச் சேமித்தே மடித்து போகும்!
ஏன்பிறந்தோம் என்றறியா எம்மின் வாழ்வோ
   இன்கம்பன் கவிபடிக்க உயர்ந்தே ஓங்கும்!

2.
பெருமைதரும் சொற்களினை முன்னால் சொன்னால்
   பெரும்பேறு கிடைத்ததுபோல் மகிழ்ச்சி பொங்கும்!
அருமைபெரும் சொற்களாலே செயலின் துன்பம்
   ஆழ்மனத்தின் உட்சென்று பெருமை பேசும்!
கருமைகொண்ட மனமெல்லாம் கண்கள் மூட
   கனவற்ற உறக்கத்தை மறந்தே போகும்!
கருணைகொண்ட மனத்தினைப் பெற்ற வாழ்வோ
   காதலினும் உயர்வென்னும் இராம காதை!

3.
ஒளிர்கின்ற பொருளெல்லாம் உயர்ந்த தில்லை!
   ஊர்கின்ற உயிரெல்லாம் நடப்ப தில்லை!
குளிர்கின்ற காலமெல்லாம் கொடுமை இல்லை!
   குவிந்திருக்கும் மலரெல்லாம் காய்ப்ப தில்லை!
களிப்பென்று நினைப்பதெல்லாம் நீல்வ தில்லை!
   கவிஞர்கள் காதலினை வெறுப்ப தில்லை!
துளிர்க்கின்ற மரமெல்லாம் தழைப்ப தில்லை!
   துயரங்கள் என்னாளும் தொடர்வ தில்லை!

(தொடரும்)

சொந்தக் கதை!!




நட்புறவுகளுக்கு வணக்கம்.
    கடந்த 14,15 தேதிகளில் பிரன்சில் நடந்த கம்பன் விழாவில் கலந்துகொண்டு கவியரங்கத்தில் நான் எழுதி வாசித்தக் கவிதை இது.
   தவிர, என் கணிணியை நிறுத்திவிட்டு திரும்ப போட்டதும் அதே பழைய அதே பிரட்சனையே வந்துவிட்டது. அது எப்படி யென்றால்.... நான் கருத்துரைகளைத் திறக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படித் திறக்கும் பொழுது கருத்துரைகளின் மேல் விளம்பரங்கள் வந்துவிடுகின்றன. அதனால் அந்தக் கருத்துக்களை என்னால் படிக்க முடிவதில்லை.
    அந்த விளம்பரங்களைத் தள்ளிவிட்டாலும் அடுத்த இரண்டு மூன்று நொடிகளிலேயே திரும்பவும் வந்துவிடுகிறது.
   அதே போல மற்றவர்களின் பதிவுகளைப் படிக்கும் பொழுதும் அப்படித்தான் எழுத்துக்களின் மேல் விளம்பரங்கள் வருகிறது. அதனால் மற்றவர்களின் பதிவுகளையும் என்னால் படிக்க முடியவில்லை.
   மேலும் சற்று சிரமப்பட்டு படித்தாலும் தமிழில் கருத்திடவும் முடிவதில்லை. நான் விசாரித்ததில் “உங்கள் கணிணியில் தான் ஏதோ பிரட்சனை“ என்கிறார்கள்.
   நான் அதைச் சரிசெய்யும் வரையில் மற்றவர்களின் பதிவுகளைப் படிக்க முடியவில்லையே என்ற கவலையும் உள்ளது. கூடிய விரைவில் சரிசெய்து விடுகிறேன்.

நட்புடன்
அருணா செல்வம்.

வியாழன், 26 செப்டம்பர், 2013

யாராவது உதவி செய்யுங்களேன்... ப்ளீஸ்!!






நட்புறவுகளுக்கு வணக்கம்.
    நான் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் இருந்ததால் உங்களுடன் அதிக தொடர்பில் இல்லாமல் இருந்தேன். இப்பொழுது இங்கு வந்ததிலிருந்து உடல் நிலை சரியில்லை. இப்பொழுது சற்று பரவாயில்லை.
   என்ன இவரின் சொந்தக்கதை சோகக்கதை எல்லாம் சொல்கிறார்களே என்று நினைக்க வேண்டாம். ஆனால் நீங்கள் வேண்டாம் என்றாலும் நான் சொல்லி தான் ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். காரணம்...
    என்னுடைய மகிழ்ச்சியான தருணங்களில் மிக முக்கியமானது மின் வலையில் பதிவுகளை ஏற்றுவதும் மற்றவர்களின் பதிவுகளைப் படித்துக் கருத்திடும் நேரமும் ஆகும். ஆனால் இப்பொழுது அதிலும் பிரட்சனை வந்துவிட்டது.
   என்னவென்றால்...
   என் வலையைத் திறந்தாலே பதிவிற்கு மேல் நிறைய விளம்பரங்கள் வந்து அனைத்தையும் மறைத்து விடுகிறது. எழுத்துக்களைச் சரியாகப் படிக்க முடியவில்லை. மற்றவர்களின் வலைக்குள் போய் படித்தாலும் இப்படியான பிரட்சனைகள் வருகிறது. (இதனால் என் மனக்கவலைகளை இங்கே சொல்லி மாளாது என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்)
   நான் பலவகையில், (எனக்குத் தெரிந்த) அந்த விளம்பரங்கள் வராமல் தடுக்கப் பார்த்தாலும்.... அது சரிபடாமல் திரும்பவும் வந்து என்னை அலைகழிக்கிறது.
   ஆகவே நட்புறவுகளே.... யாருக்காவது இதனைச் சரி செய்யும் உத்தித் தெரிந்தால் அவசியம் எனக்குத் தெரியப்படுத்துங்கள்.

                     நன்றி!

அன்புடனும் நட்புடனும்
அருணா செல்வம்.
  

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

திட்டினால் அது யாரைச் சேரும்?




   ஒரு சமயம் ஞானி ஒருவர் ஒரு மரத்தடியில் அமர்ந்து மக்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார்.
   கூட்டத்தில் இருந்த ஒருவனுக்கு அவரது உபதேசங்கள் எரிச்சலைக் கொடுத்தன. உடனே அவன் எழுந்து அந்த ஞானியைக் கடுஞ்சொற்களால் திட்டினான்.
   அவன் திட்டி முடிக்கும் வரை பொறுமையாய் இருந்த ஞானி, அவனைப் பார்த்துப் புன்னகைத்தார்.
   “மகனே! இப்பொழுது நான் உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்வாயா?“ என்று கேட்டார்.
   “என்ன கேள்வி?“ என்று அவன் கேட்டான்.
   “தனக்கு அளிக்கப்பட்ட ஒரு பொருளை ஒருவர் ஏற்க மறுத்தால் அது கடைசியில் யாரைச் சென்றடையும்?“ என்று கேட்டார் ஞானி.
   “இதென்ன கேள்வி? அந்தப் பொருளை யார் கொடுத்தாரோ அவரைத்தான் சென்று சேரும்“ என்றான் அவன்.
   அதற்கு ஞானி, “நீ என்னை வாய்க்கு வந்தபடியெல்லாம் கன்னாபின்னாவென்று திட்டினாய். அவற்றை நான் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அதனால், இப்பொழுது அந்தத் திட்டுக்கள் யாவும் உன்னிடம் தானே வந்து சேரும்!“ என்றார் அமைதியுடன்.
   திட்டியவன் தலை கவிழ்ந்தான்.

(படித்ததில் பிடித்தது)
அருணா செல்வம்.

திங்கள், 23 செப்டம்பர், 2013

இரண்டு கழுதைச் சுமை!! (நகைச்சுவை)





   மன்னர் தோமூர் சீன தேசத்தை ஆண்டவர்.
   ஒரு சமயம் அவரும் அவரது நண்பரும் வேட்டையாட காட்டிற்குச் சென்றனர்.
   அவர்களுடன் அவந்தி என்பவனையும் உடன் அழைத்துச் சென்றனர்.
   செல்லும் வழியெங்கும் வெயில் சுட்டெரித்தது.
   மன்னர் தோமூருக்கும், அவரது நண்பருக்கும் அந்த உஷ்ணத்தைத் தாங்க சக்தி இல்லை. அவந்தியும் உஷ்ணத்தைத் தாங்க முடியாமல் துன்பப்பட்டான். அப்பொழுது இருவரும் தங்கள் மேலாடைகளை கழற்றி, பின்னால் வந்து கொண்டிருந்த அவந்தியின் கைகளில் கொடுத்துச் சுமந்து வரும்படி கூறினர்.
   மன்னரின் உத்தரவு என்பதால் அவந்தியும் பேசாமல் வாங்கிக்கொண்டான்.
   அவர்கள் இருவரும் வேட்டையாடி முடிக்கவும் பொழுது சாயவும் லேசாக குளிர ஆரம்பித்தது.
   “வெயில் போய்விட்டது. இப்பொழுது நாம் மேலாடை அணிந்து கொள்ளலாமே!“ என்றார் நண்பர்.
   “ஓ! பேஷாக!“ என்று சொல்லியபடி மன்னர் தோமூர் திரும்பினார்.
   அவந்தியைக் காணவில்லை.
   “அவந்தி...!“ என்று கூப்பிட்டார்.
   பேச்சில்லை.
   அப்பொழுது வெகு தூரத்தில் ஒரு புள்ளி போலத் தெரிந்தான் அவந்தி. அவன் மெல்ல ஆடி ஆடி ஏதோ பெருஞ்சுமையைச் சுமந்து வருபவன் போல் வந்து கொண்டிருந்தான்.
   அவன் அருகே வந்ததும், “அவந்தி... நீ ஒரு கழுதை பொதி சுமப்பதைப் போல் அல்லவா எங்களது துணிகளைச் சுமந்து கொண்டு வருகிறாய்“ என்று சொல்லிவிட்டுச் சிரித்தார் மன்னர் தோமூர்.
   உடனே அவந்தி, “இல்லை மகா பிரபு! நான் இரண்டு கழுதைச் சுமைகளை அல்லவா தூக்கிகொண்டு வருகிறேன்!“ என்றான்.
   தோமூரின் முகமும் நண்பரின் முகமும் சுட்ட கத்திரிக்காய் போல் சுருங்கி விட்டன.

(படித்ததில் பிடித்தது)
அருணா செல்வம்.