புதன், 27 பிப்ரவரி, 2013

மாதுதான் மதுவோ...!!







கள்ளிருக்கும் மலர்களிலே
உள்ளிருந்து பிறந்தவளோ!
சொல்லிருக்கும் இதழ்தனிலே
மெல்மயக்கம் கொடுப்பவளோ!!

இமைதிறந்து பார்த்தாலே
இதயமதோ மயங்கிவிட
கணைதொடுக்கும் பார்வையாலே
காமனவன் கெஞ்சிடுவான்!

போதைதரும் வார்த்தைகளோ
புரியாமல் புரியவைக்கும்!
கோதையவள் நடையழகோ
கூப்பிட்டு மயக்கிவிடும்!

கலகலக்கும் சிரிப்பொலியோ
கண்ணாடிச் சிதறல்கள்!
பளபளக்கும் பல்வரிசை
பளிங்கான பனிக்கட்டி!

பாராமல் இருந்தாளோ
பாரமான சுமைதெரியும்!
பார்த்துவிட்டு முறைத்தாலும்
பாரமெல்லாம் குறைந்துவிடும்!

தொடுவதற்கே அஞ்சுவதும்
தொட்டபின்பு தொடர்வதுவும்
படுவதற்கே இறைவனவன்
படைத்திட்ட மயக்கமிது!!




அருணா செல்வம்.

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

புதுமையைப் புரிந்து கொண்டேன்!!





புதுமைகளைத் தேடினேன்! அதனைப்
பழமையினுள் கண்டு கொண்டேன்!

பழமையும் அன்றொரு நாள்
புதுமையாகத் தான் இருந்திருக்கும்!

புதுமையும் மற்றொரு நாள்
பழைமையாகி விடும் தானே!

ஐயகோ...

தினம் தினம் விழித்தெழும்
பொழுதெல்லாம் புதியதாகப்
பிறந்துவிட்டோம் என்றெல்லாம்
நினைத்தாலும் அப்புதியது
பழையதின் துவக்கம் தான்
என்றாகி விடுகிறதே!

அப்படியானால்
புதுமை என்பது எதுவெனத்
தேடிப்பார்த்தேன்!

ஒரு திறமையை அடுத்தவர்
வீழ்த்தும் வரையில்
அத்திறமை தான்
புதுமை என்பதைப்
புரிந்து கொண்டேன்!!

அருணா செல்வம்.

திங்கள், 25 பிப்ரவரி, 2013

எப்படி இருந்த நான் இப்படி....





காலை உதயத்தைக்
காணாத என் கண்கள்
காலை விடியலுக்காய்க்
காத்திருந்து சிவந்துவிட...

அன்றாடம் அம்மா கைமணம்
அமிர்தமாய் இனித்திடும்
காப்பி கூட சுடுதண்ணீர்
சுவையுடன் நெஞ்சிக் குழியில்
இறங்க மறுக்க...

வாரிய தலையைத்
திரும்பத் திரும்ப
அலைத்து அலைத்துச்
சரிசெய்தும் சரிவராமல்...

இட்லிக்குச் சட்னிதான்
தோதென்று சொல்லிக் கொண்டே
தோசைக்கு அருகிலிருந்ததைக்
குழம்பென்று முடித்தவுடன்...

“இங்கிருந்த புளிகரைசல்
எங்கே போனது...?“
அம்மாவின் குரலை
அலட்சியம் பண்ணிவிட்டு...

தேவைப்படுவது
எதுவெனத் தேடாமல்
தேவையற்றதை மறக்காமல்
எடுத்துக்கொண்டு...

வெளிக்கிளம்பும் முன்னால்
கண்ணாடியில் முகத்தைப்
பார்த்துப் பார்த்துக்
குறை எதுவெனத் தெரியாமல்
ஏதோ ஒன்று குறைவதென்று
நினைத்து நினைத்து
ஏக்கப் பெருமூச்சுடன்
கிளம்பிப் போய்க் காத்திருந்தால்...
வரவேயில்லை!!

நேற்று இந்நேரம் தானே...
அந்தப் பார்வையில்
ஆழம் இருந்ததே...
யார் அது? எந்த ஊர்?
வந்தால் இன்று தைரியமாகக்
கேட்டுவிட வேண்டுமென்று...

எனக்கு நானே
ஓர் அசட்டுச் சிரிப்புடன்!
போகிறவர் வருகிறவர்
ஒருமாதிரி பார்க்க...

காலை வெயில்
கவித்தவத்தை இழந்து விட...
உச்சிக் கொதிக்க
உள்ளுணர்வு சொன்னது...
நாளைக்கு இன்னும் கொஞ்சம்
சீக்கிரம் வந்துவிட
வேண்டுமென்று!!


அருணா செல்வம்.