வியாழன், 31 மே, 2012

செம கட்டைகளின் படங்கள்!!
















சந்தன கட்டைகள்...

    உலகத்தில் உள்ள எல்லா கட்டைகளிலும் உயர்ந்தது இந்தச் சந்தன கட்டைகள் தான்.
        இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைகளிலும் கர்நாடக மாநிலத்தின் மைசூர் பகுதியிலும் மட்டுமே சந்தன மரங்கள் வளர்கின்றன.
    சந்தன மரம் வெட்டப்பட்டப் பிறகு நன்கு காய்ந்த பிறகு தான் வாசனைப் பொருட்களுக்காக பயன்படும்.
    இருபது வயதான மரமே வெட்டுவதற்கு சரியான வயதாம்.

செவ்வாய், 29 மே, 2012

மங்கல வேலி !! (கவிதை)




அவனுக்கும்
அவளுக்கும்
அர்த்தமுள்ள உறவின்
அங்கிகாரம் அது!

யார் யாருக்குச்
சொந்தமென்பதை
ஊரறிய வெளிக்காட்டி
உறுதிப் படுத்தியது!

விதைத்தவனே
பயிர் அறுக்கப்
போவதைப் பறைசாற்றும்
மங்கல வேலியது!

காலங்காலமாய்க்
கற்பின் அடையாளம்
காணாமல் போகிறது
கள்ளர்களின் பயத்தாலே!


வெறுங்கயிறு போட்டாலும்
வேண்டிடும் பொன்னுக்கு
வெறிகொண்ட மிருகத்தால்
வேதனை மீறிவிட

கழற்றி வைத்தாயிற்று
கற்பின் சின்னத்தை!
அமங்கல கோலத்தில்
சுமங்கலிகளின் அவலங்கள்!

“அடிமை சங்கிலி“
ஆய்ந்தவர் வாக்கு!
அறுத்தெரிய சொன்னதும்
அடக்கினர் அவரை!

அன்றைய நிலையில்
ஆண்மைக்கு நிகராய்
அகங்காரம் இருந்தது.
அடுத்தவர் தொடுவரோ..

இன்றைய நிலையில்
இன்னலில் தள்ளிட
இயற்கையைத் துணையாய்
இழுத்தனர்.. இழந்தனர்..

வேலிக்கு வேலியிடும்
வேண்டாதக் காரியத்தால்
வேதனையாய்க் கழற்றி
வீம்பின்றி நடக்கின்றார்.

இருமனம் சேர்ந்த
இன்பத்தின் அடையாளம்.
இன்றுதான் காண்கின்றார்
இதயத்தின் உன்னதத்தை!!



( பிரான்சு நகரத்தில் தமிழ்ப்பெண்கள் திருடர் பயத்தால் வேறு வழியின்றித் தாலியைக் கழற்றி வைத்துவிட்டு வெளியில் செல்கின்றனர். அவர்களுக்காக எழுதிய கவிதை)

தெய்வீகம் (சிறுகதை முடிவு)

      
    துவக்கத்தில் மங்கள நாயகி ஒரு கலைஞனுக்கு உதவும் எண்ணத்தில் தான் இருந்தாள். ஆனால் நாளாக நாளாக அந்த கலைஞனின் கலைக்கு அடிமையாகி விட்டாள் என்றே சொல்லுமளவு மனத்தால் மாறியிருந்தாள். அது அவளுக்கே புரிந்தது. கலைக்கு அடிமையாவது கலைக்கு கொடுக்கும் மறியாதை தான் என்று தன் மனத்தைத் தேற்றினாள்.
   தன் உருவச் சிலையை ஒவ்வொரு நாளும் பார்த்துப் பார்த்து மேலும் மெருகேரினாள். அவன் வடித்த அவளின் உடல் அவளைவிட அழகாக இருந்தது.
   அவளுக்கு அந்தச் சிற்பியின் மேல் அதிக மரியாதை ஏற்பட்டு விட்டது. பின்பு அதுவே அன்பாக மாறி அவள் அவனுடன் உரிமையுடன் பேசிப் பழகும் இடத்தில் நிறுத்தியிருந்தது. அது அவளுக்குத் தவறாகவும் படவில்லை. ‘உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்’ என்னும் வள்ளுவர் வாக்கின் விளக்கம் அறிந்தவள்.
    முகம் தவிர அனைத்தையும் முடித்துவிட்டான். தன் உடலழகை கண்டு களித்தவாறு சிற்பியைப் பார்த்தாள்.
   “சிருட்டி.. நாளை அரசர் வருகிறார். நீங்கள் இன்றே முகத்தையும் முடித்துவிட்டால் அரசர் பார்க்கும் பொழுது முழுமை பெற்ற சிலையாக இருக்கும் அல்லவா..?’ முகமும் முடிந்த தன் சிலையைப் பார்க்கும் ஆவல் அவளுக்கு அதிகமாகி இருந்தது.
   “வேண்டாம் பெண்ணே! முகத்தை அவசரமாக முடிக்கக் கூடாது. அதுமட்டுமல்ல கண்திறப்பதற்கு நேரம் காலம் எல்லாம் பார்த்துத்தான் செய்யவேண்டும்.’ என்றான்.
   “சிருட்டி போருக்குச் சென்ற என் கணவரும் வந்துவிட்டார். நாளையிலிருந்து நான் வர மாட்டேன். பிறகெப்படி என்சிலையை முடிப்பீர்கள்?’
   நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவள் கண்களில் கலக்கம் இல்லை. ஆனால் கலங்கிப் போய் இருந்த தன் மனத்தைத் திறந்து காட்டும் தைரியம் இல்லை. ஆசைகளை விழுங்கிவிட்டு அவள் கண்களைப் பார்த்துச் சொன்னான்.
    “பெண்ணே உன் உருவம் என் மனத்தில் பதிந்து விட்டது. இனி நீ இல்லாமலேயே என் மனத்தில் இருக்கும் உன் உருகொண்டு பல பல வடிவங்களில் என்னால் சிலைவடிக்க முடியும். ஆனாலும் ஒரு கவலை என் நெஞ்சை அழுத்துகிறது பெண்ணே!”
  “என்ன அது..?’
   “இத்தனை நாள் பழகியிருக்கிறோம்; ஆனால் நீ உன் பெயரையோ எங்கே வசிக்கிறாய் என்பதையோ கடைசி வரையில் என்னிடம் சொல்லவேயில்லையே…”
    “வேண்டாம் சிருட்டி. நாம் கலைக்காக பழகிய நாட்கள் இந்த சிலையுடன் முடிந்து விடட்டும். நீங்கள் விருப்பப் பட்டது போல் இந்த சிலையால் உங்கள் திறமை என்றென்றும் பேசப்படும். நானும் இந்த சிலையால் உலகம் உள்ளவரை வாழ்வேன். நன்றி சிருட்டி. நான் வருகிறேன்.” அவள் சொல்லிவிட்டு சென்ற போது அவன் பார்வையை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் தாழ்ந்ததை அவள் அறிந்து வருந்தினாள்.

   “சிருட்டி அற்புதம் அற்புதம். நான் எதிர் பார்த்ததை விட அழகாக அமைந்துள்ளது இந்தச் சிலை. உன் திறமைக்கு என்ன பரிசு தருவதென்றே தெரியவில்லை. மங்கள நாயகி நீ சொல். இந்த சிற்பிக்கு என்ன பரிசு தந்தால் தகும்?’ வெள்ளைத் துணியால் முகத்தை மூடியிருந்த சிலையின் உடல்பாகத்தை மட்டும் கண்ட மன்னன் மனைவியைப் பார்த்துக் கேட்டார்.
    “அரசே பொறுங்கள். சிலை முழுவதும் முடியட்டும். பிறகு அவர் கேட்கும் பரிசை அளிக்கலாம்.” என்றாள் அருகிலிருந்த மங்கள நாயகி.
    “அதுவும் சரிதான். சிருட்டி நாளை மறுநாள் நல்ல நாள். கோவில் பூசைகள் அன்றிலிருந்து துவங்கப்படும். அன்று காலையில் சிலைகண்திறப்பு வேலைகளை முடித்து விடுங்கள். உத்தர கோச மங்கையைக் காண நாம் ஆவலாக இருக்கிறோம். வருகிறோம்.” உத்தரவுடன் கிளம்பினார்.
    சிருட்டி அதிர்ச்சி மாறாமல் நின்றிருந்தான்.

     ண்திறந்த பிறகு கருவூலத்தில் அமர்த்தப்பட்ட தன் உருவச் சிலையை ஆவலுடன் நோக்கினாள் மங்கள நாயகி. அவளுக்கு முதலில் அதிர்ச்சி. பின்பு கோபம்.
    அழகே உருவான அவள் சிலையின் முகம் வாராகி முகமாக அமைத்திருந்தது தான் அவள் கோபத்திற்குக் காரணம். ஏன் இப்படி..? என்னவாயிற்று..? புரியவில்லை. மனம் புழுங்கினாள்.
   இது ஒரு சமயம் அரச கட்டளையாக இருக்குமோ… அந்த சிலையில் தன் உருவைக் கண்டு கொண்டதால் அரசர் இம்முகத்தை வாராகி முகமாக அமைக்கச் சொல்லி கட்டளை இட்டுயிருப்பாரோ.. அரசனைப் பார்த்தாள்.   
    நந்திவர்மன் மங்கை அம்மன் சிலைக்குத் தன் கைகளால் பாலூற்றி நீராட்டிக் கொண்டிருந்தான். வந்திருந்த அனைவரும் கைகூப்பி வணங்கி கொண்டிருந்தனர்.
   வாராகித் தலையுடன் கூடிய அழகி பெண் உடம்பை உருவாகக் கொண்ட சிலை மற்றவர்களுக்குத் தெய்வமாகப் பட்டது. கலையம்சம் என்பது தெய்வீகம் பொருந்தியது தான்!


   அருகில் நின்றிருந்த அமைச்சரிடம் கேட்டாள். “அமைச்சரே அழகான உருவச் சிலையின் முகம் மட்டும் ஏன் வாராகி முகமாக அமைத்தார்கள்? நான் இப்படி அமைக்க சொல்லவில்லையே…’
  “ ஆமாம் மகாராணி. நீங்களும் சொல்லவில்லை. மன்னனும் சொல்லவில்லை. இது தெய்வக் கட்டளை மகாராணி. சிற்பியின் கனவில் தோன்றி சிலையின் முகத்தை வாராகி முகமாக அமைக்கச் சொன்னதாம் ஒரு தேவதை. அதன்படி அமைத்து விட்டார் நம் சிற்பி.
   தவிர நம்மகாராணி மங்கையின் தந்தை சாளுக்கிய மன்னர் ஜெயசிம்மன். அவர்களின் சின்னம் வாராகம். அதனால் அம்மனின் முகம் வாராகமாக அமைந்ததில் எங்கள் அனைவருக்கும் திருப்திதான் மகாராணி.’’ சொல்லிவிட்டு பயபக்தியுடன் அம்மனைக் கும்பிட்டார்.
   அவளால் இதை நம்ப முடியவில்லை.
   சிருட்டியைத் தேடினாள். அவன் அங்கு இல்லை! எந்த முடிவுக்கும் வர முடியாமல் பூசை முடியும் வரை காத்திருந்துவிட்டு கொதித்த மனத்துடன் அரண்மனைக்குச் சென்றாள்.

   “மகாராணி.. நீங்கள் சொன்ன சிற்பி நேற்றிரவே தன் மனைவி பிள்ளைகளுடன் ஊரைவிட்டே சென்று விட்டாராம்.’’ பணிவுடன் சொன்ன பணிப்பெண்ணை நம்பாதவளாகப் பார்த்தாள் மங்கள நாயகி.
   “அப்படி ஊரைவிட்டுப் போக என்ன காரணம் என்று விசாரித்தாயா..?’’
   “விசாரித்தேன் மகாராணி. ஆனால் யாரும் சரியான பதிலைச் சொல்லவில்லை. அந்த வீட்டில் ஒரு கிழவி இருந்தாள். அந்த சிற்பிக்கு உறவென்று நினைக்கிறேன். அவள் தான் முதல் நாள் இரவெல்லாம் அந்த சிற்பி தூக்கத்தில் “மகாராணியா.. ஐயோ என் கட்டைவிரலை வெட்டி விட்டார்களே.. என் கட்டை விரல் போயிடுச்சி.. நான் எப்படி இனிமேல் சிலை செதுக்குவேன்.. என் வாழ்வே போய்விட்டதே’… என்று தூக்கத்தில் அரட்டிக் கொண்டே இருந்ததாகச் சொன்னாள். வேறு எதுவும் தகவல் கிடைக்க வில்லை மகாராணி’’ என்றாள்.
   மங்கள நாயகி கவலையுடன் அமர்ந்தாள். “உன் உருவச்சிலை உலகழியும் வரையில் இருக்கும்’; என்று ஆசையைத் தூண்டியவன் அமைத்த உருவச் சிலை கண்முன் தோன்றியது. கண்களை மூடினாலும் கண்ணுள் தெரிந்தது.
    கைபோனாலும் பரவாயில்லை தான் கண்ட பெண்ணைத் தான் சிலைவடிப்பேன் என்று சொன்னவன் எங்கே? மகாராணி என்று அறிந்ததும் கட்டை விரல் போய்விடும் என்ற அச்சத்தில் ஊரைவிட்டு ஓடிப் போனவன் எங்கே?
    மங்கள நாயகி யோசனையில் ஆழ்ந்தாள். புரிந்தது அவளுக்கு. கலை என்பது கலைஞனின் கைவண்ணம் தான். கடவுள் அவதாரம் இல்லை! ஆகமொத்தத்தில் கலையைக் கொலை செய்தவன் இந்தச் சிலையை வடித்த சிற்பி என்பது மட்டும் அவள் மனத்தில் ஆழப் பதிவாகி விட்டது.
  
   “அன்னையே…’ கோச்செங்கணன் குரல் கேட்டு கண்களைத் திறந்தாள் மங்கள நாயகி.
   செங்கணனுடன் நின்றிருந்தவர் யாரென்று தெரியவில்லை.. எங்கோ பார்த்த முகம்….!! கேள்வியுடன் மகனைப் பார்த்தாள்.
    “அன்னையே இந்த உத்தரக் கோச மங்கையூரில் தாயார் சன்னிதிக்கு அருகில் உங்கள் நினைவாக ஒரு சன்னதி எழுப்பலாம் என்றிருக்கிறேன். இந்தச் சிற்பி தான் உங்களைச் சிலைவடிக்கப் போகிறார். உத்தரவு கொடுங்கள்’ தலைகுனிந்து கேட்டான் வாராகி மங்கை அம்மனின் மகன் கோச்செங்கணன்;.
    காய்ந்து போன வேருக்கு நீர் எதற்கு..? “உன் விருப்பப்படி செய்யப்பா’ வெறுமையாக ஒரு புன்முறுவலுடன் சொன்னாள் இளைய மகாராணி மங்கள நாயகி.

(வாராகம் - பன்றி)


நன்றி
முத்தரையச் சோழர்கள் - சி. சுந்தரராஜன் சேர்வை
ஒப்பீட்டு நூல்கள்     - எட்வர்தார்ஸ்டன்

 

புதன், 23 மே, 2012

தெய்வீகம் (சிறுகதை)

        
  த்திரக் கோசமங்கையூரில் வடக்கு நோக்கி அமர்ந்த வாராகி மங்கை அம்மன் ஆலயத் திருவிளக்கு பூசை முடியும் வரை கோவில் காண்டாமணி கணீர் கணீரென உள்ளம் அதிரும் ஓசையில் அடித்துக் கொண்டே இருந்தது.
   கோச்செங்கணன் பூசைமுடிந்ததும் அர்;ச்சகர்; காட்டிய ஆராத்தித் தீபத்தைக் கண்களில் தொட்டு ஒற்றிக் கொண்டான்.
   எப்பொழுதும் போல எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாராகி மங்கை அம்மன் சிலையை பார்த்த வண்ணம் நின்றிருந்த நந்திவர்மச் சோழனின் இரண்டாம் மனைவி மங்கள நாயகியிடம் கொடுத்தக் குங்குமத்தை அவள் கோச்செங்கணன் நெற்றியிலிட்டாள்.
   மங்கள நாயகியின் சிவந்த குமுதமலர் முகத்தில் துள்ளிப் பாயும் காயலானக் கண்கள் இந்த கோவிலுக்கு வந்தால் மட்டும் வாடிவிடும். எதனால் இப்படி..?
   இத்தனை வருடங்களாக கவனித்தும் அரசியிடம் நேருக்கு நேராக நின்று கேள்விகேட்க முடியாத பணிப்பெண் கோமளம் ஒரு பெருமூச்சியுடன் தேரில் ஏறினாள். தேர் அரண்மனையை நோக்கிப் பறந்தது.

   கோமளம்.. கோச்செங்கணன் எங்கே..?” மங்கள நாயகியின் குரலில் அதிகாரம் இருந்தாலும் ஓசையோ மனத்தினை வருடும் தென்றலாய் இனித்தது. கோமளம் நிமிர்ந்து அரசியின் முகத்தைப் பார்த்தாள். கவலையைக் கண்ணீரால் கழுவியக் கண்களோ..! அதனால் தான் காய்ந்து இருக்கிறதோ..!
   “கோமளம்.. கேட்டக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் என்னை ஏன் இப்படி பார்க்கிறாய்?”
    அதட்டலில் சுயஉணர்வுக்கு வந்தவள் “மன்னிக்க வேண்டும் மகாராணி. இளவரசர் நண்பர்களுடன் பூங்காவில் இருக்கிறார்’. என்று சொல்லிவிட்டு “மகாராணி எனக்கு ஒரு சிறு சந்தேகம.; கேட்கலாமா?’
    தைரியத்தை வரவழைத்துக் கொண்டாலும் மிகவும் பணிவுடன் கேட்டாள்.
     மங்கள நாயகி பதிலெதுவும் சொல்லவில்லை. மௌனம் சம்மதம் என்ற பொருளறிந்த கோமளம் கேட்டாள்.
    ‘மகாராணி நம் அரசரின் முதல் மனைவி குழந்தை பிறக்கும் நாழிகை நல்லநாழிகையாக இருக்க வேண்டுமென்று பிரசவ நேரத்தில் அரைநாழிகை தலைக்கீழாக இருந்து பின் மகனை இன்றதும் உயிர் துறந்தார். அந்த மகாதேவியை நமது மாமன்னர் வாராகி மங்கை அம்மனாக சிலைவடித்து அனைவரும் தரிசித்து அருள் பெறும் படி கோவில் அமைத்துள்ளார்.
    நீங்களும் நமது இளவரசரும் நாள்தவராமல் கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்துகிறீர்கள். ஆனால் நான் பார்த்தவரையில் நீங்கள் ஒருநாள் கூட அம்மனைக் கைகூப்பி வணங்கியது கிடையாது. இதற்கு காரணம் என்னவென்று நான் அறியலாமா?’
    அவளை ஊன்றிகவனித்த மங்கள நாயகி சோகம் ததும்பும் புன்னகையொன்றை உதிர்த்துவிட்டு ‘போய் மற்ற வேலையைப் பார்’ என்று மட்டும் சொன்னாள்.
    பதில் அறியாத வேதனையில் “அந்த கோவில் தெய்வம் என்னயிருந்தாலும் இவளின் மாற்றாள் தானே.. அதனால் தான் இந்த அலட்சியமோ… இருக்கலாம்..’ தன் சிற்றறிவுக்கு எட்டியச் செய்தியுடன் தன் வேலையைப் பார்க்க நடந்தாள் கோமளம்.
   அவள் மனத்தை என்றும் உருத்திக் கொண்டிருக்கும் நிகழ்ச்சியைக் கோமளம் இன்று கிளறிவிட்டுச் சென்றிருந்தாள்.    காற்றில் அசையும் பூங்கொடியாக நடந்த வந்து தந்தக்கட்டிலில் அமர்ந்து சாய்ந்தாள் மங்கள நாயகி. கண்களை மூடிட காட்சிகள் தன் கடமையைச் செய்தன.

   கலும் இரவும் உரசிக் கொள்ளும் அந்திசந்தி பொழுது. அதிலும் கார்காலக் குளிருடன் சேர்ந்து மழையும் பெய்துக் கொண்டு இருந்ததால் ஒவ்வோர் மனங்களிலும் இதமான இன்பம் தவழும் வேலையில் அவன் கண்களில் அவள் பட்டாள்!
   மழையில் நனைந்த ஆடை உடலில் ஒட்டிவிட உடையின்றி நிற்கும் செம்பொன்னில் வார்த்த தங்க சிலையென நின்றவளைக் கண்டதும் தான் அரசர் அழைப்பை ஏற்று அரண்மனைக்குத் தானே வந்தோம்…? தவறிபோய் தேவலோகத்திற்கு வந்துவிட்டோமா…? என்ற சந்தேகம் பிறந்தது சிருட்டியனுக்கு. யோசனையுடன் அவளை உற்று நோக்கினான்.
   மேகம் உண்டாக்கிய மின்னலில் இருந்து பிறந்து பூமியில் வந்திறங்கிய மங்கையோ.. இவள் பெண் தானோ.. அல்லது பெண்போன்றிருக்கும் மழையில் நனைந்த வான்முகிலோ..! யார் இவள்..?
     அவன் தன்னை பார்வையால் விழுங்குவதைக் கண்ட அவள் “யார் நீங்கள்? சற்று ஒதுங்கி வழிவிடுங்கள்.” என்றாள் அதிகாரமாக.
     அவளழகில் அவன் மனம் மூடிக்கொள்ள வழியைமட்டும் ஒதுங்கி விட்டான். அவள் போக.. பின்புறம்.. அசைந்து போகும் தேராக… ஆகா என்ன அழகு!! இதுவரை நாம் இப்படி ஒர் அழகியைப் பார்த்ததில்லையே.. அவன் மனம் அவனிடம் இல்லை!
    ‘சிற்பியே உங்களை அரசர் அழைக்கிறார்.” சேவகன் சொல்ல மனத்தை அடக்கிக் கடமைக்குக் கைகட்டினான்.


   

 கிண்ணத்தில் இருந்த மதுவைச் சுவைக்காமல் மங்கள நாயகியின் இதழில் தங்கியிருக்கும் மதுவைச் சுவைக்கும் எண்ணத்தில் நந்திவர்மன் பார்க்க அவள் புன்னகையுடன் தலைக்குனிந்தாள்;.
    தலைக்குனிந்த தாமரையை நிமிர்த்தினான். ‘மங்களா உன்னைப் பிரிந்து இருக்கும் நேரம் நரகம் தான். ஆனால் அரசனுக்கென்ற கடமை இருக்கிறதே. என்ன செய்வது? நீ விரும்பியது போல்; கருவினில் அமர்ந்தாள் கோவில் வேலை நான் திரும்பும் தினத்துக்குள் முடிந்துவிடுமென்று நினைக்கிறேன். நம் தலைமைச் சிற்பி உயிருடன் இருந்திருந்தால் இந்நேரம் மங்கையின் திருஉருவ சிலை செய்யும் வேலையை முடித்திருப்பார்”.  பெருமூச்சுடன் பேச்சைச் சற்று நிறுத்தினார்.
    “அதற்கு நாம் என்ன செய்வது மன்னா.. நாட்டில் வேறு சிற்பியே இல்லையா..?”
    ‘ஏனில்லை? அவர் மாணவன் ஒருவன் இருக்கிறான். ஆனால் அவன் அரசியாரைப் பார்த்ததில்லையாம். அதனால் யாராவது முன்மாதிரியாக அமர்ந்தால் தான் அந்த சிலையை செதுக்கமுடியும் என்றான்.”
   ‘அதற்கென்ன.. யாராவது ஓர் அழகியை மாதிரிக்கு அமர்த்தலாம் அல்லவா..”
   ‘அமர்த்தலாம் தான். ஆனால் அவன் நேற்றிரவு நம் அரண்மனையில் ஒரு பணிப்பெண்ணைப் பார்த்தானாம். அவளது அழகும் உடல்வாகும் அவனைச் சிலைவடிக்கத் தூண்டியதாம். அந்த பெண்ணை முன் மாதிரியாக அமர்த்தினால் அவன் அந்த சிற்பத்தை நன்கு செய்துத் தருகிறேன் என்றான்.”
   இளைய ராணியின் மனத்தில் நேற்று தன்னை அதிசயமாகப் பார்த்த அந்த இளைஞன் கண்முன் தெரிந்தான். அவன்தான் மன்னர் அழைத்த சிற்பி என்பதைப் பணிப்பெண் சொல்ல அறிந்திருந்தாள.;
   இந்த உடல்வாகு ஒரு சிற்பியைச் சிலைவடிக்கத் தூண்டியதா..!! மனத்தை இலேசாக கர்வமேகம் மூடியது. நேற்று அந்த சிற்பி பார்த்தப் பார்வை அவளைச் சங்கடத்தில் ஆழ்த்தி இருந்தது. அதனால் தான் அவன் யாரென்று விசாரித்தாள்.
   ஆனால் அழகு என்பது அந்த அழகைத் தாங்கிய உடலுக்கோ மனத்திற்கோ சொந்தமில்லை. அது அவளைக் கொண்டவனுக்கு மட்டுமே மணமானப் பின் சொந்தமாகி விடுகிறது. அடுத்தவர் அவள் அழகை பார்க்கக் கூடாது. ரசிக்கக் கூடாது. புகழக் கூடாது. இது தானே பண்பாடு.
   பண்பாட்டை மீறி நாம் நடக்கிறோமா..?
   அமைதியாக யோசனையில் ஆழ்ந்திருந்த மனைவியைப் பார்த்தார் மன்னர். “என்ன மங்கள நாயகி. யார் அந்த அழகி என்று யோசிக்கிறாயா..? நல்ல வேலை. அந்தச் சிற்பி உன்னைப் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் உன்னை தான் மாதிரியாக அமர்த்த வேண்டுமென்று என்னிடமே கேட்டிருப்பான். உன்னைவிட அழகி இந்த அரண்மனையில் யார் இருக்கிறார்கள்?”
   இளையராணி முத்தாக நகையொன்றை விடுத்துவிட்டு கேட்டாள்.
   ‘அப்படி கேட்டிருந்தால் நீங்கள் என்ன சொல்லியிருப்பீங்கள் மன்னா..”
   ‘நான் எதுவும் சொல்ல மாட்டேன். ஆனால் அவனின் இரண்டு கட்டைவிரல்களை மட்டும் எடுத்துவிடுவேன்.’’ சொல்லும் பொழுது குரலிலே அழுத்தம் தெரிந்தது.
   புரிந்து கொண்டாள். கலையென்பது கற்பனையில் மட்டுமே கண்டு களிப்புற்று மகிழ்வது. கலைஞன் காணும் கனவுகளில் தெரியும் காட்சியாகத்தான் இருக்க முடியும். உண்மை ஒருநாளும் கலையாகாது. புரிந்ததும் சொன்னாள்.
    “மன்னா நான் நேற்றே விசாரித்தேன். அந்தப் பெண் மணமானவள். சிலைவடிக்க உதவுவாளா என்று தெரியவில்லை”
   “ஏன் கலைஞன் கடவுளின் அம்சம் அல்லவா.. அவருக்கு உதவ தயங்குவதா?” மன்னன் கேட்க மங்கள நாயகி மனத்திற்குள் சிரித்தாள்.
   “இருந்தாலும் அவன் ஆண்மகன் அல்லவா? இவளும் அடுத்தவனின் உரிமை அல்லவா…?’
   பேசிக்கொண்டு இருக்கும் போழுதே “மன்னா.. வணங்குகிறேன். உங்களைக் காண ஒற்றன் வந்துள்ளான்”. சேவகன் சொன்ன செய்தியில் மன்னன் மனம் பதிய
   “மங்களா.. கோவில் திருப்பணி வேலையை உன்பொருப்பில் விட்டுச் செல்கிறேன். நீயே பார்த்துச் செய். நான் அந்த சிம்ம விஷ்ணு பல்லவனைத் தோற்கடித்து விரட்டியடித்து விட்டு வரும் பொழுது கோவில் வேலை முற்று பெற்றிருக்க வேண்டும். நான் வருகிறேன்.” அன்பு மனைவியுடன் ஆனந்தகளிப்பாட இருந்த மன்னன் கோபத்துடன் போர் களிப்பாடக் கிளம்பினான்.

   “மகாராணி அந்தச் சிற்பி… மாமன்னர் தன் இரு கைகளையும் வெட்டி எடுத்தாலும் பரவாயில்லை. தான் பார்த்தப் பெண்ணைத் தவிர வேறு ஒரு பெண்ணைச் சிலைவடிக்க மாட்டேனென்று சொல்கிறார். ஆனால் யார் அந்த பெண் என்று எங்கள் யாருக்கும் தெரியவில்லையே...’ என்றாள் பணிப்பெண்.
   “சரி நீங்கள் போங்கள்.’ உத்தரவு விட்டு விட்டு யாருக்கும் தெரியாமல் கிளம்பினாள்.
   கோவில் கட்டுமான வேலை நடந்து கொண்டு இருந்தது. மாதிரிப் பணிசெய்யும் குன்றுகளில் அமைந்த மாடக்கோவிலுக்குச் சென்றாள.; அவள் எதிர் பார்த்தது போலவே அவன் வலையங் கோட்டை ரதங்களை உளி கொண்டு செதுக்கிக் கொண்டு இருந்தான்.


    இவளைக் கண்டதும் ஆனந்த வெள்ளம் பெருக ஓடி வந்தான் அருகில். ‘பேரழிகியே வா வா. நீ எப்படியும் வருவாய் என்று எனக்குத் தெரியும். நம் அரசியார் எப்படியும் உன்னை இங்கு அனுப்புவார் என்று அறிந்தே உனக்காகக் காத்திருந்தேன். வா.. உன்னை செதுக்கவே என் உளி காத்துக்கொண்டு இருக்கிறது.”
    அவன் ஆசையுடன் அழைத்த அழைப்பு அவளை பாதித்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் “சிற்பியே நான் மணமானவள் என்று உமக்குத் தெரியும் அல்லவா..?”
    “தெரியும். நான் வணங்கும் பராசக்தியும் மணமானவள் தான். நான் அவளை சிற்பமாக செதுக்கவில்லையா..? நான் ஒரு கலைஞன். என் பார்வையில் அழகு மட்டும் தான் தெரியும். அதை அடைய நான் ஆசைப்படக் கூடாது என்பதும் எனக்குத் தெரியும். தயங்காதே பெண்ணே! என் கை உன்மீது படாது. வா வந்து இந்த இடத்தில் உட்கார்”
    “சிற்பியே நீங்கள் சொல்வதை நான் ஏற்று கொள்கிறேன். ஆனால் நான் மணமானவள் என்பது என்மனத்தில் நன்கு படிந்துள்ளது. வேரோர் ஆண் என்உடம்பை உற்று பார்ப்பதை என்னால் ஏற்க முடியாது. அதனால் இந்த செயலுக்கு நான் உடன்பட மாட்டேன். நீங்கள் அரசர் உத்தரவின்படி வேரொருப் பெண்ணை அவசியம் சிலையாக வடிக்கும்படி சொல்லிவிட்டு போகத்தான் நானே நேரில் வந்தேன்;. வருகிறேன்.’ கிளம்பினள்.
    “நில் பெண்ணே! நான் ஒரு கலைஞன். நீங்கள் போடும் உத்தரவில் எல்லாம் என்னால் சிலைவடிக்க முடியாது. பெண்ணே… தயவுசெய்து உன்னிடம் கேட்டுக்கொள்கிறேன். கலையைக் கலையாக மட்டும் பார். உன்சிலை உருவாகி விட்டால் எனக்கும் புகழ் கிடைக்கும.; என்னால் உன் உருவம் உலகம் உள்ள அளவில் மட்டும் இருக்கும். சற்று யோசித்து பார். இதை நான் எனக்காகக் கேட்கவில்லை. என் உள்ளிருக்கும் திறமையை இவ்வுலகிற்கு காட்டுவதற்காகவும் தான் கேட்கிறேன். தயவு காட்டு பெண்ணே.” இரு கைகூப்பி நின்றான்.
    மங்கள நாயகி யோசித்தாள். இவன் சொல்வதும் உண்மை தான். இந்த சிற்பி தன் உருவச்சிலையைச் செதுக்கினால் அந்த கற்சிலை உலகம் உள்ள மட்டும் நிலைத்து நிற்கும். அதுமட்டுமல்லாமல் இந்த கலைஞனின் திறமையும் உலகறிய வெளிப்படும்.
    ஆனால் மன்னருக்குத் தெரிந்தால்…?
    “சிற்பியே உன் விருப்பத்திற்கு நான் உதவுகிறேன். ஆனால் ஒரு வேண்டுகோல். இந்த சிலைக்கு நான் தான் முன்மாதிரியாக அமர்ந்தேன் என்று யாருக்கும் தெரியக் கூடாது.’’ என்றாள்.
   சிலைசிருட்டியன் மனத்திற்குள் சிரித்தான். சரி என்று தலையாட்டிவிட்டு அவள் அமர இடத்தைக் காட்டினான். அமர்ந்தாள்.


                              (தொடரும்)



(மன்னிக்கவும்… சிறுகதை வரலாற்று கதை என்பதால் சற்று நீண்ண்ண்டு விட்டது. பயம் வேண்டாம். நிச்சயம் அடுத்த பதிவில் முடிந்துவிடும். நன்றி.) 

செவ்வாய், 22 மே, 2012

ஆசை பொங்க எழுதினேன்!! (கவிதை)






புத்தாடும் மலரழகில் சொக்கும் வண்டாய்ப்
   பொன்னாடும் காதழகில் மயங்கும் கண்கள்!
நாற்றாடும் வயல்வெளியின் பசுமை போன்று
   நறுங்கவிதை படிக்கின்ற நங்கை உள்ளம்!
பார்த்தாடும் பருவத்தாள்! அழகின் உச்சம்!
   பார்க்கின்ற பார்வையிலே கவிதை கெஞ்சும்!
ஊற்றாடும் துள்ளலென ஆசை பொங்கி
   ஓடிவரும் வெள்ளத்தால் எழுதி விட்டேன்!






(பு என்ற எழுத்தின் நெடில் என்னிடம் இல்லை.)

திங்கள், 21 மே, 2012

பொய் சொல்லப் போறேன்...!!




வணக்கம் தோழர்களே தோழியர்களோ...
    அதாவதுங்க எனக்குச் சின்ன வயசுலேர்ந்தே ஒரு கெட்டப் (நல்ல) பழக்கம்ங்க. எதுக்கெடுத்தாலும் பொய் சொல்லுவேனாம். நான் சொல்வதெல்லாம் பொய். பொய்யைத் தவிர வேற ஒன்னுமே இல்லைன்னே தைரியமாகச் சொல்வேனாம்.
    இது இப்படியே இருந்திருக்க... இப்போ நான் எது சொன்னாலும் யாருமே என்னை நம்ப மாட்டேங்கிறாங்க.... என்ன செய்யறதுன்னே தெரியலைங்க.
    இதனால இப்போ என்ன பிரட்சனைன்னு கேக்குறீங்களா....
    அதை ஏங்க கேட்குறீங்க...
    சொல்கிறேன். சொல்லதானே வந்தேன்.
    என்னோட பெயர் “அருணா செல்வம்“
    இந்தப் பெயர் இருப்பதால நான் ஆண்பிள்ளையா..? பெண் பிள்ளையா...? என்ற சந்தேகம் நிறைய பேருக்கு வந்திருக்கிறதுன்னு நினைக்கிறேன்.
    நான் இப்போ உண்மையைச் சொல்லுறேங்க.
    நான் நிஜமாகவே மீசை வைக்காத ஆண்பிள்ளை தாங்க!!
    நான் பிறந்த போது எனக்கு “முத்து அருணாச்சலம்“ என்று தான் பெயர் வைத்தார்களாம். அந்தப் பெயரைப் பதியும் பொழுது “முத்து அருணாச்சல்லம்“ என்று பதிய... கடைசியில் அருணா செல்வம் என்றாகிவிட்டதாம்.
    சின்ன வயதிலிருந்தே எங்கள் குடும்பப்பெயரான (நாங்கள் பிரென்சு நேசனாலிட்டி என்பதால்) “முத்து“ என்றே அனைவரும் கூப்பிட்டதால் எனக்குப் பெரியதாக மாற்றம் தெரியவில்லை.

    ஆனால்...
    ஒருமுறை... நான் எழுதிய நாவலை அறிமுகப்படுத்திய திரு.தமிழ்வாணன் அவர்களின் மகன் திரு. ரவி தமிழ்வாணன் அவர்கள் (அவர் என்னைப் பார்த்ததில்லை.) மேடையில் “நாவலாசிரியர் அருணாசெல்வம் அவர்கள் மேடைக்கு வரவும்“ என்று அறிவித்தார். நானும் போய் நின்றேன். என்னை யாருமே கண்டுக்கவே இல்லை.
    திரு. ரவி தமிழ்வாணன் அவர்களும் மேடையிலே வேறு நிறைய விசயங்கள் பேசிவிட்டுத் திரும்பவும் “நாவலாசிரியர் அருணா செல்வம் மேடைக்கு வரவும்“ என்றார்.  நான் உடனே கையைத் துர்க்கி “நான் தாங்க அருணா செல்வம் என்றேன்“. அவருடைய அதிர்ச்சி அவர் முகத்தில் தெரிந்தது.
    உடனே சமாளித்துக் கொண்டு “ஓ.. நீங்கள் தானா...“ என்று பிறகு சாதாரணமாகப் பேச ஆரம்பித்தார். இருந்தாலும் எனக்கு அப்பொழுது கொஞ்சம் நெருடலாகத் தான் இருந்தது.
    இப்பொழுதும் ஒரு நெருடல் தான். இது கொஞ்சம் வேற மாதிரி நெருடல். என்னவென்றால்... நான் ஏதோ வலையிலுள்ள நண்பர்கள் அனைவரையும் ஏமாற்றுவதாக நினைக்கிறார்களே என்று.
    நான் ஏமாற்றவில்லைங்க. ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேங்க... “ஏமாற்ரவங்க இருக்கிற வரைக்கும் ஏமாத்துறவன் ஏமாத்துவான் தாங்க“
    இன்னும் என்னை நீங்க நம்பவில்லை என்றால்...
என்னை நீங்கள்......
தோழா என்றோ
தோழி என்றோ
நண்பா என்றோ
நண்பர் என்றோ
சகோதரா என்றோ
சகோதரி என்றோ
சகோ என்றோ
அருணா என்றோ
செல்வம் என்றோ அல்லது
அருணா செல்வம் என்றோ..... உங்களுக்கு வசதி படுவது போல எழுதுங்கள்.
    எந்த ஒரு கலைஞரும் ரசிகர்களிடம் அன்பையும் பாராட்டையும் தான் எதிர்பார்ப்பார்கள். (அவர்கள் மேஜிக் செய்து காட்டுபவர்களாக இருந்தால் கூட) நானும் அப்படித் தாங்க.
    
    என் வலைக்குள் வந்து படித்த அனைவருக்கும் மிக்க நன்றிங்க.